Skip to main content

என்னைப் பற்றி


வணக்கம்,

எனது பெயர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன். இந்த வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையல் கலையும் ஒன்று. உணவு என்பது வாழும் ஜீவராசிகளுக்கு ஆதாரம். சமையல் கலையில் முழு விருப்பத்துடன் ஈடுபட்டால் சாதாரண பொருட்கள்களைக் கொண்டு சமைக்கும் உணவும் கூட அமிர்தமாக விளங்கும் என்பது என்னுடைய எண்ணம். எனக்கு சிறு வயதிலிலேயே சமைப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

நான் எதை புதிதாக சமைத்து பார்க்கும் போது என் அம்மா எனக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள். அதுவும் எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. என் அப்பா நான் எதை செய்தாலும் பாராட்டி ருசித்து மகிழ்வார். அந்த பாராட்டு எனக்கு மேலும் ஒரு தூண்டுகோலாக இருந்தது. எனது தங்கை நான் புதிதாக செய்யும் உணவுகளை ருசித்து மிகவும் துல்லியமாக அவற்றில் உள்ள நிறைகுறைகளை சுட்டிக்காட்டுவாள்.

2003ஆம் ஆண்டில் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரிகளுக்கு இடையே நடந்த சமையல் போட்டியில் தேங்காய் பராத்தா  செய்து காண்பித்து அதன் செய்முறை விளக்கத்தையும் கூறி வந்தேன். நடுவர் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் நாகேஷிடம் பரிசு கிடைத்ததா என்று கேட்பது போல் என் அப்பா என்னிடம் கேட்டார். உதை ஒன்று தான் கிடைக்கவில்லை என்று நாகேஷ் சொன்ன மாதிரி நானும் சொல்லும் போது நடுவர் குழுவினரால் என் பெயர் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் சென்னையில் இல்லதரிகளுக்கு நடந்த சமையல் போட்டியில் கலந்து கொண்டு Chef. Dr. தாமோதரன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு  Kitchen Queen of Chennai என்ற பரிசை பெற்றேன். இது தான் என்னுடைய விருந்தோம்பல்.காம் (www.virundhombal.com) என்ற வலைப்பூ (blog) ஆரம்பிக்க காரணமாக அமைந்தது. இந்த வலைப்பூவில் திறம்பட குறிப்புகள் போஸ்ட் செய்வதற்கு என் கணவர் அவ்வப்போது ஊக்குவித்து வருகிறார். எனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கித் தருவதோடு புதுமையாக செய்வதற்கு உதவுவார். என் மகன் சிவா என் வலைப்பூவிற்கு first & best critic.  இளம் வயதினர் சமையல் செய்து பழகும் போது ஒரு குழந்தைக்கு அருகில் இருந்து பாடம் சொல்லிக் கொடுக்கும் போது இருக்கும் தன்மையைப் போல குறிப்புகளைப் பார்த்து எளிதாக புரிந்து சரியாக செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக ஸ்டெப் பை ஸ்டெப் படங்களும், விளக்கமும் வலைப்பூவில் பதிவு செய்கிறேன். அதற்கு நிறைய வரவேற்புப்பும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனது அம்மாவின் உதவியோடு  இந்த வலைப்பூவில்தமிழில் எனது குறிப்புகளை பதிவு செய்து வருகிறேன். நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் வெளியிடுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. அஞ்சல் வழிக் கல்வியில் நீச்சல் கற்றுக் கொள்வது மற்றும் சைக்கிள் கற்றுக் கொள்வது போல் இல்லாமல் உலகில் பலதரப்பட்ட மக்களும் சமையல் கலையை நன்கு புரிந்து கொண்டு சிறப்பாக செயல்பட உதவுவதே என்னுடைய வலைப்பூவின் நோக்கம்.


என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. திருநெல்வேலியில் உள்ள சைவ சமையல் தனித்தன்மை வாய்ந்ததாகும். திருநெல்வேலியை பூர்விகமாகக் கொண்ட என் ஆச்சி எனக்கு நிறைய குறிப்புகளை கற்றுத் தருகிறார்கள். என் தாத்தா தமிழர்களின் விருந்து உபசரிக்கும் பண்பை சுட்டிக் காட்டும் பொருட்டு விருந்தோம்பல் என்ற பெயரை வலைப்பூவிற்கு பரிந்துரைத்தார்கள். என் சகோதரன் கனகசபாபதி இந்த வலைப்பூவிற்கு தேவையான வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கு உதவி செய்து மற்றும் ஆலோசனைகள் கொடுத்து வருகிறார். இவர்கள் அனைவரும் அளிக்கின்ற உத்வேகம்தான் எனக்கு மேலும் மேலும் புதுமுயற்சிகள் செய்ய தூண்டுகோலாக இருக்கின்றது.




Comments

Popular posts from this blog

தேங்காய் பராத்தா - Coconut Paratha

தேங்காய் பராத்தா மிக எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும். எந்த வயதினருக்கும் ஏற்றது.   தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் தேங்காய்காய் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா - 4 இலைகள் கொத்தமல்லி இலை - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு கைகளில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். மாவின் மேலே சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து லேசாக வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி ஆறவிடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய சப்பாத்தியாக போட்டு நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வதக...

திருநெல்வேலி இடி சாம்பார் - Tirunelveli Idi Sambar

தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு சிறிய எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 அல்லது 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 சிறிய துண்டு மாங்காய் 1/4 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி செய்ய 7 காய்ந்த மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு 1.5 டேபிள் ஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் அரிசி 1/2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கருப்பு உளுந்து சிறிதளவு எண்ணெய் அரைக்க 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 டீஸ்பூன் சீரகம் செய்முறை துவரம்பருப்பை கழுவி விட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை நிறம் மாற ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம், அ...

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு - Tirunelveli Kootanchoru

கூட்டாஞ்சோறு - திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவு. காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சோறு. இதற்கு நாட்டு வாழைக்காய், வெள்ளை கத்திரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்கீரை முக்கிய காய்கறிகளாகும். இந்த சோறு செய்து ஆறிய பின் இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரம் சமமாக சேர்ந்து சுவையாக இருக்கும். இதற்கு கூழ் வத்தல் அல்லது அப்பளம் வைத்து பரிமாறவும் . தேவையான பொருட்கள் 2 கப் புழுங்கல் அரிசி 1/2 கப் துவரம்பருப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 10 சின்ன வெங்காயம் 3 பச்சை மிளகாய் உப்பு தேவையான அளவு காய்கறிகள் 2 கேரட் 10 பீன்ஸ் 10 கொத்தவரங்காய் 2 முருங்கைக்காய் 7 கத்தரிக்காய் 1 வாழைக்காய் 1 உருளைக்கிழங்கு சிறிதளவு மாங்காய் துண்டுகள் 1 கப் முருங்கைக்கீரை இலைகள் அரைக்க 1 கப் தேங்காய் துருவல் 20 காய்ந்த மிளகாய் 15 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 1 டேபிள்ஸ்பூன் சீரகம் தாளிக்க 1/2 கடுகு 1/2 டீஸ்பூன் உள...